Saturday, May 25, 2013

வாக்கிங்கும், டயடிங்கும்...

சிருஷ்டி-3 in www.padmalogy.blogspot.in
 
தினமும் நான் வாக்கிங் செல்லும் போது என் மூத்த மகளும் வாக்கிங் வருவாள். காலையில் 5.30 மணி முதல் 6.30 மணி வரை பேசிக் கொண்டே வாக்கிங் செல்வோம். உடல், உள்ளம் இரண்டும்  ரிலாக்ஸ் ஆகும்.

இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் தெருவில் இருந்த ஒரு பெண்மணி என் மகளிடம் கேட்டார்.
‘அம்மாவுக்கு வயசாகிறது வாக்கிங் செல்கிறார்...உங்களுக்கு சின்ன வயசு தானே? அதோடு நீங்க குண்டா இல்லையே? பிறகு ஏன் வாக்கிங் செல்கிறீர்கள்?’
இது தான் பெரும்பான்மையோர் செய்கின்ற தவறு. ஆம். உடம்பு குண்டாக இருந்தால் தான் வாக்கிங் போக வேண்டும் என்பது தவறான கருத்து. உடல் உழைப்பு குறைந்து வருகின்ற இன்னாளில் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருக்குமே ஏதேனும் ஒரு வகையில் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் அவசியமாகிறது. அது நடை, ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல் இப்படி அவரவர்கள் வயதுக்கு ஏற்ப ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். உடல் பயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டம் சீரடைகிறது. உடல் புத்துணர்ச்சி அடைகிறது. காலை நேர 1/2 மணி நேர உடல்பயிற்சியால் நாள் முழுவதும் உடலும், மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

அதுபோல டயடிங் என்பதும் ஏதோ சர்க்கரை மற்றும் இருதய நோய் வந்தவர்களும், உடல் பருமனாக இருப்பவர்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று நினைக்கிறார்கள். அதுவும் முற்றிலும் தவறு. டயடிங் என்பது சாப்பிடாமல் உடலை ஒல்லியாக  வைத்துக் கொள்வதற்கு என்றும் சிலர் நினைக்கிறார்கள்.இரண்டுமே தவறு தான். எந்த வயதானாலும் சரிவிகித உணவை சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்து நிறைந்த உணவை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். காய்கள், பழங்கள்,  கீரை வகைகள், பருப்பு போன்றவற்றின் அளவை  அதிகப்படுத்தலாம். இதைத்தான் சரிவிகித உணவு என்கிறார்கள்.

சரிவிகித உணவையும், உடற்பயிற்சியையும் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தினால் உடலும், உள்ளமும் புத்துணர்வாக இருக்கும்.

சாப்பாட்டுக்கும் குணநலனுக்கும் கூட தொடர்பு உண்டு. அதற்கு மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு இருக்கிறது. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

-பத்மா(www.padmalogy.blogspot.in)-