Friday, May 31, 2013

பார்வைகளும், ஆசிர்வாதங்களும்!

சிருஷ்டி-6 in www.padmalogy.blogspot.in
 
ஆசிர்வாதம் செய்வது என்பதை நல்லெண்ணத்துடன் வாழ்த்துவது என்று பொருள் கொள்ளலாம். ஆசிர்வாதத்துக்கும், பார்வைக்கும் சம்பந்தம் உண்டு என்கிறது சாஸ்திரங்கள். ஒருவரை கண்களால் பார்க்கும் போதோ அல்லது அவரது நற்செயலை நாம் காதுகளால் கேட்கும் போதோ, மனமும் அதை நல்லெண்ணத்தோடு கிரஹித்துக் கொண்டு, அதே அதிர்வலையில் ஆசிர்வதிக்கும் போது தான் அதன் முழுமையான பலனும் சென்றடையும். பார்வைகள் மற்றும்  அதன் தொடர்பான ஆசிர்வாதங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். பார்வையில் 3 விதம் உண்டு. ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு பலன் உண்டு.
 
1.   ஹஸ்த தீட்சை
2.   நேத்ர தீட்சை
3.   மானச தீட்சை
 
ஹஸ்த தீட்சை:
கையசைத்து ஆசிர்வதிப்பது ஹஸ்த தீட்சை. உதாரணத்துக்கு, மகான்கள் தங்கள் பக்தர்களுக்கு கையசைத்து ஆசிர்வாதம் செய்வது ஹஸ்த தீட்சை.
 
நேத்ர தீட்சை:
கண்களாலேயே தன் அருளைக் காட்டி ஆசிர்வதிப்பது நேத்ர தீட்சை. உதாரணத்துக்கு மீன்கள் தண்ணீரில் முட்டைகளை இட்டு, முட்டைகளை திரும்பித் திரும்பிப் பார்த்து கண்காணித்து வரும். அந்த பார்வையினாலேயே அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்குமாம். இது நேத்ர தீட்சை.
 
மானச தீட்சை:
மனதால் நினைத்து மானசீகமாக ‘நலமாக இரு’ என்று வாழ்த்துவது மானச தீட்சை. உதாரணத்துக்கு ஆமை மணலில் முட்டை இட்டு விட்டுப் போய்விடும். ஆனால் தன் முட்டைகளை மனதிலேயே நினைத்திருக்குமாம். தன் நினைவினாலேயே ஆமை குஞ்சு பொரித்து விடும்.
 
பத்மா(www.padmalogy.blogspot.in)

Wednesday, May 29, 2013

படைப்புகளின் காப்பிரைட்...

சிருஷ்டி-5 in www.padmalogy.blogspot.in
 
ஃபேஸ்புக் பிரபலமாக ஆரம்பித்த பிறகு ஒருவரது பதிவுகள்  பலரால் கட்-காப்பி செய்யப்பட்டு அவர்களது பெயரில் ஷேர் செய்யப்படுகிறது. இதைப் பற்றி என் மகள் நிறுவனத்தில் என் மகளை சந்திக்க வந்த ஒரு கிளையிண்ட் வருத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நானும் அங்கிருந்தேன். அவருக்கு நான் ஒரு கதையை சொன்னேன். அதிலிருந்த உண்மை அவருக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்...

ஒரு தேனியும், பறவையும் நேரில் சந்தித்துக் கொண்டன.
தேனிக்கள் மிகவும் கஷ்டப்பட்டு பூக்களில் இருந்து தேனை எடுத்து தேன் கூடு கட்டி சேமிக்கின்றன. ஆனால், மனிதர்கள் தேன்கூட்டின் கீழே நெருப்பை மூட்டி தேனிக்களை விரட்டி தேனை திருடி எடுத்து பயன்படுத்துகின்றனர். கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் நீங்கள். ஆனால் அதை சுலபமாக திருடிச் சென்று விடுகின்ற மனிதர்கள் மீது உங்களுக்கு வருத்தமே வராதா? என்று கேட்ட பறவைக்கு தேனி சிரித்துக் கொண்டே பதில் சொன்னது.

மனிதர்களால் நாங்கள் சேமித்த தேனியைத் தான் திருட முடியும். ஆனால் தேனை சேகரிக்கும் எங்கள் திறனை அவர்களால் திருட முடியாதல்லவா?

எவ்வளவு பெரிய உண்மை இக்கதையில் இருக்கிறது? ஒருவரது படைப்பை  யார் வேண்டுமானாலும் திருடி தன் பெயரில் அதை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த படைப்பைப் படைத்த படைப்பாளியின் திறமையை யாராலும் ரீ-கிரியேஷன் செய்யவே முடியாது என்பது தான் இக்கதை மூலம் உணர்த்தப்படுகின்ற செய்தி.

படைப்பை திருட முடிகின்றவர்களால், படைப்பாளிகளின்  திறமையை தொடக் கூட முடியாது. 

இக்கதையை இன்று FM ஒன்றில் காலையில் ஒரு அறிவிப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தார். விடியற்காலையில் இக்கதையை கேட்ட போது மனதுக்கு இதமாக இருந்தது.

-பத்மா(www.padmalogy.blogspot.in)-


 

Tuesday, May 28, 2013

உணவும், குணமும்!

சிருஷ்டி-4 in www.padmalogy.blogspot.in

உணவுக்கும், குணத்துக்கும் சம்மந்தம் உண்டு என்பதை மகாபாரதத்தில் ஓர் நிகழ்வு அருமையாக விளக்குகிறது. அது என்ன என்று பார்ப்போம்.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீற்றிருக்கிறார். அப்போது அவரிடம் தர்மநீதியைப் பற்றிப் பற்றிச் சொல்லுங்கள் என்று எல்லோரும் கேட்கின்றனர்.

‘மனிதர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். தவறை யார் செய்தாலும் நடுநிலையோடு கண்டிக்க வேண்டும்’ என்றார் பீஷ்மர்.

அப்போது திரெளபதி கேட்கிறார்.
‘இந்த நியாய எண்ணம் என்னை துகில் உரித்த போது ஏன் வரவில்லை?’

பீஷ்மர் பொறுமையாக பதிலுரைத்தார்.
‘அப்போது நான் துரியோதனனின் சாப்பாட்டை சாப்பிட்டு வளர்ந்தேன். அதனால் நடுநிலை தவறி நடந்து கொண்டேன். அநியாயங்களுக்கு துணை நின்றேன். இப்போது நான் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதால் அவன் உணவால் உருவான இரத்தம் அனைத்தும் வெளியேறி விட்டது. இப்போது நான் என் சுய குணத்தோடு இருக்கிறேன். அதனால் என் பேச்சில் தர்மமும், நடுநிலையும் வெளிப்படுகிறது’

உணவு அளிப்பவனின்  குணநலன்களினால், அந்த உணவை உண்டு வாழ்பவர்களின் குணநலன்கள் மாறுபடும் என்பது இந்நிகழ்வின் மூலம் தெளிவாகிறதல்லவா?

-பத்மா(www.padmalogy.blogspot.in)-
 

Saturday, May 25, 2013

வாக்கிங்கும், டயடிங்கும்...

சிருஷ்டி-3 in www.padmalogy.blogspot.in
 
தினமும் நான் வாக்கிங் செல்லும் போது என் மூத்த மகளும் வாக்கிங் வருவாள். காலையில் 5.30 மணி முதல் 6.30 மணி வரை பேசிக் கொண்டே வாக்கிங் செல்வோம். உடல், உள்ளம் இரண்டும்  ரிலாக்ஸ் ஆகும்.

இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் தெருவில் இருந்த ஒரு பெண்மணி என் மகளிடம் கேட்டார்.
‘அம்மாவுக்கு வயசாகிறது வாக்கிங் செல்கிறார்...உங்களுக்கு சின்ன வயசு தானே? அதோடு நீங்க குண்டா இல்லையே? பிறகு ஏன் வாக்கிங் செல்கிறீர்கள்?’
இது தான் பெரும்பான்மையோர் செய்கின்ற தவறு. ஆம். உடம்பு குண்டாக இருந்தால் தான் வாக்கிங் போக வேண்டும் என்பது தவறான கருத்து. உடல் உழைப்பு குறைந்து வருகின்ற இன்னாளில் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருக்குமே ஏதேனும் ஒரு வகையில் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் அவசியமாகிறது. அது நடை, ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல் இப்படி அவரவர்கள் வயதுக்கு ஏற்ப ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். உடல் பயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டம் சீரடைகிறது. உடல் புத்துணர்ச்சி அடைகிறது. காலை நேர 1/2 மணி நேர உடல்பயிற்சியால் நாள் முழுவதும் உடலும், மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

அதுபோல டயடிங் என்பதும் ஏதோ சர்க்கரை மற்றும் இருதய நோய் வந்தவர்களும், உடல் பருமனாக இருப்பவர்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று நினைக்கிறார்கள். அதுவும் முற்றிலும் தவறு. டயடிங் என்பது சாப்பிடாமல் உடலை ஒல்லியாக  வைத்துக் கொள்வதற்கு என்றும் சிலர் நினைக்கிறார்கள்.இரண்டுமே தவறு தான். எந்த வயதானாலும் சரிவிகித உணவை சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்து நிறைந்த உணவை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். காய்கள், பழங்கள்,  கீரை வகைகள், பருப்பு போன்றவற்றின் அளவை  அதிகப்படுத்தலாம். இதைத்தான் சரிவிகித உணவு என்கிறார்கள்.

சரிவிகித உணவையும், உடற்பயிற்சியையும் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தினால் உடலும், உள்ளமும் புத்துணர்வாக இருக்கும்.

சாப்பாட்டுக்கும் குணநலனுக்கும் கூட தொடர்பு உண்டு. அதற்கு மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு இருக்கிறது. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

-பத்மா(www.padmalogy.blogspot.in)-

Friday, May 24, 2013

விருந்தோம்பல்...


சிருஷ்டி-2 in www.padmalogy.blogspot.in

       மிழர்களின் பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. அந்த விருந்தோம்பலும் கசந்து போகின்ற சூழலும் ஏற்படும் என்பதற்கு மகாபாரதத்தில் அருமையான நிகழ்வு  ஒன்று உள்ளது. அதை வார பத்திரிகை ஒன்றில்  திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் எழுதியிருந்தார். அப்போது, சிறுவயதில் நான் படித்ததும் நினைவுக்கு வந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
      ஒருசமயம் அஸ்தினாபுரத்தில் தர்மபுத்திரர் நிகழ்த்தும் ராஜசூய யாகத்தை ஒட்டி தினந்தோறும் அன்ன தானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்றியுள்ள எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் தினந்தோறும் அந்த யாகத்துக்கு வருகை தந்து வயிறார சாப்பிட்டுச் சென்றனர். தன் சகோதர்கள் அனைவருக்கும் பிரத்யேகமாக வேலைகளை பிரித்துக் கொடுத்தார் தர்மபுத்திரர்.  நகுல சகாதேவர்களுக்கு யாகத்துக்கு வருபவர்களை வரவேற்கின்ற வேலையைக் கொடுத்தார். அர்ஜூனனுக்கு யாகசாலையை பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்திருந்தார். போஜனப் பிரியரான பீமனிடம் யாகத்துக்கு வருகின்றவர்களுக்கு வயிராற சாப்பாடு பரிமாறி உபசரிக்க வேண்டும் என்ற பணியை ஒப்படைத்தார்.
      ஒருசில தினங்களில் யாகத்தில் கலந்து கொண்டு உணவு உண்போர் கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. காரணம் புரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில், புல்லாங்குழலுடன் கண்ணன் அவ்விடம் வந்து சேர, தர்மபுத்திரர்  தன் சோகத்தை அவனிடம் கொட்டித் தீர்த்தார். அதற்குள் பீமன் ஒரு தட்டில் 3 டம்ளர் பாலுடன் வந்து, ஒரு டம்ளர் பாலை எடுத்து கண்ணனிடம் நீட்டி குடிக்கச் சொல்லி உபசரித்தான். கண்ணனும் ஆனந்தமாக அருந்தினான். உடனடியாக பீமன் மற்றொரு டம்ளர் பாலை கொடுத்து பருகச் சொன்னான். வயிறு நிரம்பி விட்டது. போதும் என்று கண்ணன் மறுத்தாலும், பீமன் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பாலையும் பருகினான் கண்ணன். அதற்கும் மூன்றாவது டம்ளர் பாலை கொடுத்து அருந்தச் சொல்லி பிடிவாதமாக வற்புறுத்தத்  தொடங்கினான் பீமன். அப்போது  பீமனுக்கு ஒரு அவசர் வேலையைச் செய்யச் சொல்லி பணிந்தான் கண்ணன். அதாவது கந்தமாதன மலைக்குச் சென்று, அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் தங்கநிற முனிவரை சந்திப்பது தான் கண்ணன் பீமனுக்கு இட்ட அந்த அவசர வேலை.
      சரி... அவரிடம் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று வினவினான் பீமன்.
      ஒன்றும் குறிப்பாகச் சொல்ல வேண்டாம். கண்ணன் அனுப்பினான் என்று மட்டும் சொல். ஆனால் அம்முனிவரை மிக மிக நெருக்கத்தில் பார்க்க வேண்டும் என்பது தான் முக்கியம்என்றான் கண்ணன்.
      குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்த தர்மபுத்திரரிடம் கண்ணன் சொன்னான்...உன் யாகசாலையில் உணவு உண்போர் குறைந்து போனதுக்கும், பீமனை நான் கந்தமாதன மலைக்கு அனுப்பியதற்கும் ஒரு தொடர்பு உள்ளது என்று இரகசியமாக் சில விஷயங்களைச் சொல்ல, குழப்பம் தீர்ந்து ஆச்சர்யத்தில் கண்களை விரித்தார் தர்மபுத்திரர்.
     இதற்குள் பீமன் கந்தமாதன  மலையை அடைந்தான். தங்கநிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த முனிவரை சந்தித்தான். அவர் உதடுகள் மட்டும் கருத்திருந்தன. இம்மலையில் தங்கிச் செல்ல வந்தாயா? என்று முனிவர் வினவ,  இல்லை ஸ்வாமி, கண்ணன் சொன்னதால் தங்களை தரிசிக்கவே வந்தேன்...’ என்று பதிலுரைத்த பீமன் கண்ணன் சொன்னபடி அம்முனிவரை வணங்க மிக அருகில் நெருங்கிச் செல்ல முயன்றான். ஆனால் பீமனுக்கு அவரை நெருங்க இயலாத அளவுக்கு துர்நாற்றம் குடலைப் பிடுங்கியது. அந்த நாற்றம் முனிவரின் வாயில் இருந்து வந்தது. ஆனாலும் மூக்கை இறுக்கிப் பிடித்தபடி முனிவரை மிக அருகில் நெருங்கு முகத்தை உற்று நோக்கினான். என்ன ஆச்சர்யம். கருத்திருந்த முனிவரின் வாய் பொன்னிறமானது
      கண்ணா...என் தெய்வமே... என் வாய் நாற்றத்தை என்னாலேயே சகிக்க முடியாமல் இத்தனை நாட்கள் வாழ்ந்து கொண்டிருந்தேன்...இப்போது கருத்த வாயும் பொன்னிறமாயிற்று...துர்நாற்றமும் போய்விட்டது...நன்றி கண்ணா!’ என்று நன்றிப் பெருக்கில் கண்ணீர் விட்டார் முனிவர்.
      குழப்பமாய் நின்றிருந்த பீமனிடம் சொல்லத் தொடங்கினார் முனிவர்.
      ‘நான் செய்த பாவத்தினால் தான் இத்தனை காலங்கள் என் வாய் கறுத்திருந்தது...கறுத்த வாயைத் திறந்து பேசினால் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்தது. கண்ணனிடம் என் நிலை எப்போது சரியாகும் என்று கேட்டேன். பீமன் வந்து சந்திக்கும் போது சரியாகும் என்று சொன்னார். இன்று நீ வந்து என்னை சந்தித்து எனக்கு பாவ விமோசனம் கொடுத்து விட்டாய்..’
      பீமனுக்கு ஆச்சர்யம் விலகாமல் கேட்டான்... ‘அப்படி என்ன பாவம் செய்தீர்கள் முனிவரே?
      முனிவர் தொடர்ந்தார்.
       தானத்தில் தலை சிறந்தது அன்னதானம். பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்ததால் என் உடல் பொன்னிறம் பெற்றது. ஆனாலும் என் ஆர்வக் கோளாறால் வயிறு புடைக்க உண்டவர்களை கஷ்டப்படுத்தி இன்னும் சாப்பிடுங்கள், இன்னும் சாப்பிடுங்கள் என்று வடையையும், பாயசத்தையும் அவர்களை உபசரித்துக் கொண்டே இருந்தேன். வயிறார சாப்பாடு போட்டு உபசரிப்பது மாபெரும் புண்ணியம். அதே சமயம் வயிறார உண்டவர்களை மேலும் மேலும் சாப்பிடு, சாப்பிடு என வற்புறுத்துவது மாபெரும் பாவச் செயல். ஒருவரின் உடலுக்கு ஆரோக்கியக் கேடு விளைவித்தால் அது பாவம் தானே? மேலும் அளவுக்கு மீறி பரிமாறுபவர்களுக்கும், உணவை சாப்பிட முடியாமல் மீதம் வைப்பவர்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு வரும் தானே? அது மட்டுமில்லாமல் உணவை உற்பத்தி செய்கின்ற விவசயிகளுக்கு நாம் செய்கின்ற துரோகம் தானே இச்செயல்? இவை அத்தனைக்கும் காரணமான அதிகப்பிரசங்கித்தனமாய் உபசரித்த வாய் மட்டும் கறுத்து போய், அதிலிருந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியது. உன்னால் அந்த தண்டனையில் இருந்து மீண்டேன்...நன்றி பீமா...’
      பீமனுக்கு தன் தவறு புரிந்தது. தன் கடுமையான உபசாரத்தினால் தான் யாகத்தில் சாப்பிட வருகின்ற கூட்டம் குறைந்து போனது என்பதை உணர்ந்து முனிவரிடம் விடைபெற்று கண்ணனை சந்தித்து மன்னிப்புக் கூறி பணிந்து நின்றான் பீமன்.
      எல்லாமே ஒரு அளவோடு இருந்தால் நல்லது. விருந்தோம்பலும் அது போல தான். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் தான். விருந்தோம்பலும் கசந்து போகும் என்பதை இக்கதை விளக்குகிறதல்லவா?
-பத்மா(www.padmalogy.blogspot.in)-