Monday, June 24, 2013

தினம் 10 செயல்கள்!

சிருஷ்டி-9 in www.padmalogy.blogspot.in
 
1.   விடியற்காலையில் எழுந்ததும் பத்து நிமிடங்கள் வாக் சென்று வந்தால் சுறுசுறுப்பாக இருக்கும்.

2.   அதுபோல ஐந்து நிமிடங்கள் பிராணாயானம் செய்தாலும் சுறுசுறுப்பாக உணரலாம். தரையில் அமர்ந்து கண் மூடி மூச்சை நன்றாக இழுத்து விடலாம். இதை பத்து முறை, பதினைந்து முறை என கணக்கு வைத்துக் கொண்டு செய்தால், அதுவே மிகச் சிறந்த மூச்சுப் பயிற்சியாகும்.

3.   காலையில் காபி சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது நல்லது.

4.   சாப்பாடு சாப்பிடுவதற்கு அரை மணி முன்னதாகவும், சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகும் வெதுவெதுப்பான வெந்நீர் சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

5.   இரவு உறங்குவதற்கு முக்கால் மணி நேரத்துக்கு முன்னால் வெந்நீர் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

6.   பொதுவாகவே தயிராக சாப்பிடுவதற்கு பதில் மோராக கடைந்து சாப்பிடுவது சிறந்தது.

7.   இரண்டு மூன்று முறை காபி சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள், ஒரு காபியை கட் செய்து விட்டு, தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். நல்ல எனர்ஜி கிடைக்கும்.

8.   வெந்நீரில் டீப்பொடியையும், சர்க்கரையையும் போட்டு கொதிக்க விட்டு, இறக்கியதும் எலுமிச்சைப்பழச் சாற்றைப் பிழிந்து குடித்து வரலாம்.

9.   தலைவலி வந்தால் சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் சாப்பிட்டு விட்டு உங்கள் வேலையை கவனியுங்கள். சாதாரண தலைவலி என்றால் தானாகவே உங்களை விட்டு போய்விடும்.

10. தினமும் வழக்கமாக செய்கின்ற வேலைகளுக்கு நடுவே, ஏதேனும் ஒரு புத்தகத்தில் கதை, கவிதை அல்லது கட்டுரை படிப்பது, பிடித்த பாட்டு கேட்பது என்று மாற்றிச் செய்யும் போது புத்துணர்வாக இருக்கும்.
 
பத்மா in சிருஷ்டி-9 in www.padmalogy.blogspot.in

Wednesday, June 12, 2013

அம்மாவா? மகனா? பாசத்தில் யார் ஜெயித்தது?

சிருஷ்டி-8 in www.padmalogy.blogspot.in
 
என்னுடைய  மகள் வயிற்றுப் பேரனுக்கு இப்போது 10 வயதாகிறது. அவனுக்கும் என் மகளுக்கும் இடையே ஒரு வாக்குவாதம்.
  
என் மகள்: ‘நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்’.
 
என்  பேரன்:  ‘இல்லையில்லை நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்’.
 
என் மகள்:  சரி, நீ என்னை எந்த அளவுக்கு லவ் பண்ணறே?
 
என் பேரனின் பதிலில் நாங்கள் புல்லரித்துப் போனோம். அப்படி என்ன சொல்லி இருப்பான் என் பேரன்?
 
என் பேரனின் பதிலை நீங்களே கண்டுபிடியுங்கள்:

A: வானமளவு
B: கடலளவு
C: உலகலவு
D: இவை எதுவுமில்லை...
 
உங்கள் பதில் D என்றால், சரியான பதில் என்னவாக இருக்கும்?

 

பதில் D: இவை எதுவுமில்லை.


பேரனின் பதில்:
 

‘அம்மா! நீ என்னை எவ்ளோ லவ் பண்ணறயோ அதைவிட அதிகமா நான் உன்னை லவ் பண்ணறேன்’
 

பத்மா in சிருஷ்டி-8 @  www.padmalogy.blogspot.in

Monday, June 10, 2013

செடி கொடிகளின் பாசமும், நேசமும்!

சிருஷ்டி-7 in www.padmalogy.blogspot.in

    நான் தினமும் மொட்டை மாடியில் வளர்க்கின்ற செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவேன். தொட்டிச் செடிகளுக்கு என்ன புரியுமோ தெரியவில்லை, தலையை ஆட்டி ஆமோதித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பதைப் போல அசைந்தாடும்.

    என் மகள் தண்ணீர் ஊற்றும் போது, செடிகளின் ரியாக்‌ஷனே மாறிவிடும். உம்மென்று கோபித்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்து கொள்ளுகின்ற சிறுபிள்ளைகளின் பிடிவாதம் போல அசைவற்று அமைதியாக இருக்கும். இருவரும் ஒரே தண்ணீரைத் தான் ஊற்றுகிறோம். ஆனால் செடிகளின் ரியாக்‌ஷன் மட்டும் வெவ்வேறு மாதிரி இருக்கிறதே என்று என் மகள் என்னிடம் கேட்காத நாளே இல்லை.

        செடி கொடிகளின் மேல் தீராத காதலுடன், வாஞ்சையாக சின்னஞ்சிறு குழந்தையை கையாளுவதைப் போல மென்மையாகவும், அனுசரணையாகவும், கருணையோடும் பராமரிக்கும் போது, ஆறறிவு மனிதர்களின் பாசத்தையும், நேசத்தையும், பரிவுணர்வையும் ஓரறிவு செடிகொடிகள் புரிந்து கொள்ளும். அதை விட்டு கடமையாக இயந்திரத்தனமாய் தண்ணீர்  ஊற்றும் போது செடிகொடிகளும் அதே ரியாக்‌ஷனைத்தான் திரும்பக் காட்டும். இது தான் என் பதில்.

        ஒருமுறை என் மகள் ஒரு செடியை தத்தெடுக்கிறேன் என்று சொல்லி தன் கைகளால் நட்டு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள். ஆனால் ஒரே வாரத்தில் வாடி வதங்கிப் போய் சுருண்டு படுத்து விட்டது. பிறகு நான் அதற்கு உரம் போட்டு வைத்தியம் பார்த்து குணமாக்கிய நிகழ்வு தனி கதை. 
பத்மா in சிருஷ்டி-7 @  www.padmalogy.blogspot.in