Thursday, September 10, 2020

ஆன்லைன் மன அழுத்தங்கள் குறைய வேண்டுமா?

 காம்கேர் கே. புவனேஸ்வரி

ஹலோ with காம்கேர் – 252

September 8, 2020

கேள்வி:  நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்யவில்லை என்ற மனோபாவம் ஏன் வருகிறது?   

பப்ஜி கேம் விளையாட முடியாத சோகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் வீட்டை விட்டு ஓட்டம், ஃபேஸ்புக்கில் நட்பு என்ற போர்வையில் தனிப்பட்ட முறையில் தன் புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்துகொண்ட பள்ளி மாணவியை ப்ளாக் மெயில் செய்யும் கும்பல், இன்ஸ்டாகிராமில் ஆண் நட்புகளினால் ஏமாற்றப்பட்ட இளம் பெண் விரக்தியில் தற்கொலை இப்படியாக பலதரப்பட்ட செய்திகள் கொரோனாவுடன் சேர்ந்து பயணம் செய்வது நேரடியாகவே என் காதுகளுக்கு வரும்போது தொழில்நுட்ப வளர்ச்சி மீது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது.

கொரோனா கால லாக் டவுனுக்குப் பிறகு ஒவ்வொருவருக்குள்ளும் ஏகப்பட்ட  பிரஷர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேருக்கும் ஒவ்வொருவிதமாய். பெண்களுக்கு சமையலறை, குழந்தைகளுக்கு வெளியே எங்கும் செல்ல முடியாமல் சதா டிவியிலேயே இருப்பது, கடனில் வீடும் காரும் வாங்கியவர்களுக்கு கடன் அடைக்க வேண்டுமே என்கின்ற கவலை, பலருக்கு வேலை போய்விட்டதே என்ற மன அழுத்தம், சிலருக்கு சம்பளம் குறைந்துவிட்டதே என்ற மனப்புழுக்கம் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் பிரச்சனைகள்.

இதற்கிடையில் மாணவ மாணவிகள் இன்ஸ்ட்ராகிராம் வாட்ஸ் அப் ஃபேஸ்புக் இவற்றுக்கு அடிமை ஆகி பலவிதமான சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

ஆன்லனில் ரம்மி விளையாடி பல லட்சங்களில் ஏமாந்துபோன ஓர் இளைஞனின் பெற்றோர் என்னிடம் பேசியபோது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.   

சில நாட்களுக்கு முன்னர் ஒரு டிவி விளம்பரம்  கண்ணில் பட்டது.

இந்தந்த மொபைல் ஆப்களில்  ரம்மி  விளையாடுங்கள். நான்  நிறைய சம்பாதித்தேன். நீங்களும் சம்பாதிக்கலாம். இன்னும் விளையாடி ஒரு பைக் வாங்க போறேன்னு  ஓர் இளைஞர்   சொல்கிறார். நான் கார் வாங்கி விட்டேன் என மற்றொருவர் சொல்கிறார். என் மனைவிக்கு விலை உயர்ந்த மொபைல் வாங்கித் தந்தேன் என்று ஒருவர் சொல்கிறார்.   

பின்னர் இது பல தொலைக்காட்சி சேனல்களிலும் விளம்பரமாக வந்தது. 

லாக்டவுன் காலத்தில் வேலை இழந்த இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி மூலமாவது சம்பாதிக்கலாமே என்று நினைத்து தங்கள்  வங்கியில் இருக்கும் பணத்தை எல்லாம் ஆப்பில் கட்டி  விளையாடத் தொடங்குகிறார்கள்.

ஆன்லைன் ரம்மியில் எதிரில் விளையாடும் நபர் அந்த விளையாட்டில் புலியாக இருப்பார்.

முதலில் ஒரிரு முறை எதிராளியை ஜெயிக்கச் செய்து தூண்டில் போட்டு அவர்களிடம் பணத்தைக் கறப்பதே அவரின் நோக்கமாக இருக்கும். ஓரிரு முறை ஜெயித்ததும் பண வெறி அதிகரிக்கும்.

அடுத்தடுத்த முறை தோல்விகளை சந்தித்தாலும் அந்த விளையாட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு போதை அதிகரிக்கும். வங்கி கணக்கில் இருந்து கண்ணுக்குத் தெரியாமல் அத்தனை பணத்தையும் வைத்துவிளையாடி எல்லாவற்றையும் இழந்த பிறகுதான் தாங்கள் புதை குழியில் விழுந்ததே தெரியும் பலருக்கு. பணத்துக்கு பணமும் போய், வீட்டில் அதை சொல்ல முடியாத மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சி, வீட்டை விட்டு சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடுதல் என சீரழிந்து வருபவர்கள் குறித்து சமீபமாய் அதிகம் கேள்விப்படுகிறேன்.

இவ்வளவு ஏன் நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்யவில்லை என்பதுபோன்ற மன இறுக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?

அதுபோல் நம் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டுவிட்டு அதற்கு நம் பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பலரை நான் நித்தம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

நாம் வேலை பிசியில் நம் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டுவிட்டால் போச்சு. அதற்குள் அவர்கள் அடையும் மன அழுத்தம் சொல்லிமாளாது.

அதுபோல்தான் வாட்ஸ் அப்பில் தகவல் ஏதேனும் அனுப்பி விட்டு நாம் பார்த்த அடுத்த நொடி நம்மிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கும் மனோநிலையும். நாம் என்ன ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலுமா பணி புரிகிறோம். நம் பணிக்கு அவை உதவுகிறது. அவ்வளவுதானே. அதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்.

சாதாரண லைக், கமெண்ட்டுக்கே இத்தனை மன அழுத்தம் என்றால், ஆன்லைன் ரம்மியிலும், பப்ஜி கேமிலும், ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் நட்புகளின் தொந்திரவுகளினால் உண்டாகும் மன அழுத்தத்தின் அளவை சொல்லவும் வேண்டுமா?

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே ஒரு ஆலோசனையை மட்டும்தான் நான் வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் பெற்றோர்களிடத்தில் பப்ளிக் மோடிலும், வெளி உலகில் பிரைவேட் மோடிலும் இருக்க வேண்டும். ஆனால் நடப்பதோ பெற்றோர்களிடத்தில் பிரைவேட்டாகவும் வெளிஉலகில் பப்ளிக்காகவும் இருக்கிறார்கள்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் எல்லாவற்றையும் பகிரங்கமாக வெளிப்படையாக பகிரும் இளைஞர்கள் வீட்டில் தங்கள் பெற்றோரிடத்தில் ‘அது எங்கள் ப்ரைவசி’ என்று சொல்லி எல்லாவற்றையும் மூடி மறைக்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல் படியாக, பெற்றோர்கள் தங்கள் மொபைலை பிள்ளைகளிடம் கொடுத்து இதில் வாட்ஸ் அப், மெசன்ஞர், எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் என எதை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளுங்கள். எதுவுமே மறைப்பதற்கில்லாமல் இருக்கும் என சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பெற்றோர் மன சுத்தமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது பிள்ளைகளும் அப்படி செயல்பட முயற்சிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் வாட்ஸ் அப் தகவல்களை பிள்ளைகளிடம் மறைக்க முயலும்போது அதையேதான் அவர்களும் செய்வார்கள். மாற்றம் பெரியவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும்.

அதுபோல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும்போது தாங்கள் என்னவோ தவறுகளே செய்யாமல் சேட்டைகள் எதுவும் செய்யாத சமர்த்துப் பிள்ளைகளாய் வானத்தில் இருந்து நேரடியாக குதித்து வந்த அதிசயப் பிறவிகள் போல பேசுவதை தவிர்த்துவிட்டு தாங்கள் சிறுவயதில் செய்த சின்ன சின்ன சேட்டைகள், தவறுகள் இவற்றை மனம் திறந்து பிள்ளைகளுடன் பேச வேண்டும்.

எதனால் தவறுகள் செய்தோம் என்று சொல்லும் அதே நேரம் எப்படி அதில் இருந்து மீண்டு வந்தோம் என்பதையும் மறக்காமல் சொல்ல வேண்டும்.

இதை எல்லாம் இயல்பாக கதைபோல அவர்களுடன் அரட்டை அடித்தபடி பேசினால் பிள்ளைகளுக்குள் அறிவுரையாகச் செல்லாமல் அனுபவமாக உள்ளே செல்லும். இப்படி இருங்கள், அப்படி இருங்கள் என்று அறிவுரை சொல்வதைவிட பல மடங்கு நற்பலனை கொடுக்கும் இப்படியான மனம் திறந்த பேச்சு.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் வகுப்பாசிரியை எங்களுடன் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த ஆசிரியைக்கு அப்போது 45 வயதிருக்கும்.

ஒருநாள் அவர் சாலையில் பள்ளிக்கு நடந்து வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளைஞன் அவரை கீழே தள்ளிவிடாத குறையாய் சைக்கிளில் வேகமாக வந்திறங்கி ‘டீச்சர், நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க…’ என்று சொல்லிவிட்டு பறந்துவிட்டான். முதல்நாள் என்பதால் பதட்டமடைந்திருக்கிறார்.

அடுத்த நாளும் சாலையில் வேறொரு திருப்பத்தில் பைக்கில் காத்திருந்து இதுபோல சொல்லிவிட்டு பறந்திருக்கிறான். இரண்டாம் நாள் மன அழுத்தம் அடைந்திருக்கிறார்.

அதற்கும் அடுத்த நாள் கொஞ்சம் உஷாரான மன நிலைக்கு வந்துவிட்டார். ஒரு தியேட்டர் அருகே நடந்து வந்துகொண்டிருந்த போது நடந்து வந்து அவரிடம் இதுபோலவே சொல்ல வர, அவர் அவன் கைகளை அழுத்தமாக பிடித்து கண்களை உற்று நோக்கி ‘என்னப்பா என்ன படிக்கிறாய், எனக்கு உன் வயதில் ஒரு மகன் இருக்கிறான்… உன் அப்பா அம்மா என்ன செய்கிறார்கள்…’ என்று இயல்பாக பேச ஆரம்பிக்க அந்த இளைஞன் தடுமாறி கைகளை விடுவித்துக்கொள்ள எத்தனை முயற்சித்தும் முடியாமல் தலை குனிந்திருக்கிறான்.

‘பார்த்துப்பா படிப்பில் கவனம் வை… வாழ்க்கையை தொலைச்சுடாதே… உன் அப்பா அம்மா உன்னை நம்பி வீட்டில் காத்திருக்கிறார்கள்’ என்ற தோரணையில் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

அதன் பின்னர் அவன் பின் தொடர்வது நின்று போனதாம்.

இந்த நிகழ்வை வகுப்பில் எங்கள் ஆசிரியை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் எங்களிடம் கதைபோல சொல்லி, ‘இந்த வயதுக்கு எனக்கு இதுபோல பிரச்சனை வருகிறது. நான் இப்படி சமாளித்தேன். உங்களுக்கு இப்படி அனுபவம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என ஒரு கேள்வியை முன் வைத்தார்.

ஆளுக்கொரு பதில். பதிலில் தெளிவில்லை என்றாலும் இதுபோன்ற சூழல் ஏற்படலாம். ஏற்பட்டால் எப்படி நடந்துகொள்வது என்பதை நாசூக்காக எங்களுக்குப் புரிய வைத்தார் அந்த ஆசிரியை.

இப்படித்தான் அறிவுரைகள் அமைய வேண்டும். அதைவிட்டு ‘எல்லாம் நாம் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது…. நாம் ஒழுக்கமாக இருந்தால் யார் நம்மிடம் வாலாட்டுவார்கள்’ என்ற தோரணையில் அறிவுரை இருந்தால் குழந்தைகள் கூட அந்த அறிவுரைக்கு கட்டுப்படமாட்டார்கள்.

அப்பா அம்மா மட்டும்தான் நம் அந்தரங்கங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். வேறு யாரிடம் என்ன பகிர்ந்தாலும் அது பாதுகாப்பில்லை. வெளிய கசிந்துவிடும் என்ற ஆழமாக நம்பிக்கையை பிள்ளைகளுக்குள் எப்பாடுபட்டாவது விதைத்து அந்த லகானை தங்கள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அவர்களை வழிநடத்துவது ஒன்றே பிள்ளைகள் பாதை மாறிப் பயணிக்காமல் இருக்கச் செய்யும் ஒரே யுக்தி.

கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் முடியாததில்லை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO

Compcare Software


Sunday, February 7, 2016

பிரார்த்தனை



என்னைச் சுற்றித்தான் எத்தனை கம்பி வேலிகள். கூட்டம் கூட்டமாய் மனிதர்கள்? கைக் குழந்தைகளோடும், ஒரு இடத்தில் கால் பாவாமல் ஓடும் விளையாட்டுப் பிள்ளைகளோடும், வயதான காலத்தில் கைத்தடிகளை ஊன்றிக் கொண்டும் தவமாய் தவம் கிடக்கும் மனிதர்களைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது.

கூட்டம், வரைமுறை இல்லாத நெரிசல், வியர்வை, நாற்றம், இருமல், கைக் குழந்தைகளின் அழுகைகள், விளையாட்டுப் பிள்ளைகளின் சிணுங்கல்கள், மிரட்டும் அப்பாக்கள், பொறுமையாக காத்திருக்க கைகளாலும், கண்களாலும் கெஞ்சும் அம்மாக்கள், அக்கா-தம்பி செல்ல சண்டைகள், அண்ணன்-தங்கை சீண்டல்கள் என விதவிதமான அனுபவங்கள்.

ஆண்கள் வேட்டி சட்டைதான் போட்டு வரவேண்டும், பெண்கள் துப்பட்டாவுடன் சுடிதார் என்று வலியுறுத்திச் சொல்லியும், விதிமீறலாய் சிலர் பார்த்துக்கொள்ளலாம் என்று வந்திருக்க அவர்களை திருப்பி அனுப்புகிறார்கள்.

கூண்டை விட்டு வெளியே குளிர்பானங்களும், உணவுபண்டங்களும் விற்பனை செய்து கொண்டிருக்க, மக்கள் விலை இரண்டு மடங்காக இருந்தாலும் யாருமே பேரம் பேசாமல் கையை வெளியே நீட்டி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பக்தி மயமாக வருவோருக்கு இடையே ஜாலியாக பிக்னிக் போல நண்பர்களோடு வருகின்ற இளம் வட்டங்களில் ஒருசிலரின் தரம் கெட்ட செய்கைகளினால் தூய்மை பறிபோய் கொண்டிருந்தது.

கூட்டத்தைச் சாக்காக வைத்து பத்து, பண்ணிரெண்டே வயதான சிறுமியை, அவள் கூட வந்திருக்கும் பெற்றோருக்குத் தெரியாமல் இரண்டு இளைஞர்கள் தங்களுக்குள் பேசி கிண்டல் செய்து வர, அவளை விட இரண்டு வயது பெரியவனாக இருக்கும் அவள் அண்ணன் புரிந்துகொண்டு முறைத்தான். அதுவரை தங்கையுடன் சண்டை போட்டு வந்தவனுக்கு எங்கிருந்து வந்தது இந்த பாசம். இதைத்தான் தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்கிறார்களோ?

உடனே இளைஞர்கள் கேலியாக சிரித்துக் கொண்டார்கள். ‘டேய்… மனிதர்களில் மட்டும் தான் பெண்கள் அழகு, மற்ற உயிரினங்களில் ஆண்கள்தான் அழகு… ஆண் மயிலுக்குத்தான் தோகை… ஆண் யானைக்குத்தான் தந்தம்…’ என்ற ரீதியில் ரொம்ப புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பைச் சொல்லி விட்டதைப்போல கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அவை வெளியில் யாருக்கும் தெரியாதவாறு, அவர்கள் குறி வைக்கும் பெண்களுக்கு மட்டும் காதில் விழுமாறு பார்த்துக் கொண்டார்கள்.

தேக்கி வைக்கப்படும் கூட்டத்தினால்தான் இதுபோன்ற முகம்சுளிக்க வைக்கும் செயல்பாடுகள்.

இதற்கிடையில் ஒரு கைகுழந்தை ஒன்று பிடி கொள்ளாமல் அழத் தொடங்கி கதறிக் கொண்டிருந்தது. கையில் கொண்டு வந்திருந்த பால் பாட்டிலை வாயில் வைத்துத் திணிக்கப் பார்க்கிறார்கள். புழுக்கமாக இருக்கிறதோ என சட்டையை கழற்றினார்கள். ஏதேனும் பூச்சி கடித்திருக்கிறதா என புரட்டிப் புரட்டிப் பார்க்கிறார்கள். ம்ஹும். எதற்குமே அசைந்து கொடுக்கவில்லை அக்குழந்தை. முகம் சிவந்து உதடு துடிக்க வதைந்து கொண்டிருந்தது. குழந்தைக்கு தாய் பால் கொடுத்தால் அழுகை நின்றுவிடும். அது அக்குழந்தையின் தாய்க்கும் தெரியும். எப்படிக் கொடுப்பது?

ஒரு வரிசையில் செல்ல வேண்டிய இடத்தில் மூன்று வரிசையில் மனிதர்கள் செல்ல முயற்சிக்கும் போது டிராஃபிக் ஜாம். முட்டி மோதி அடுத்தவர்களை இடித்துக் கொண்டு தரிசனத்துக்கு தீவிரமாக இருக்கிறார்கள்.

சென்ற மாதம் சஷ்டியப்தபூர்த்தி முடித்துக் கொண்டு ஒரு தம்பதிகள் தரிசனத்துக்கு வந்திருந்தார்கள். கூட்டத்தில் அந்த பெரியவருக்கு உடலை ஏதோ செய்வதைப் போல இருக்கு என்று சொல்ல, என்ன ஏது என்று விசாரித்து கூட்டத்தை விலக்கி காற்றுக்கு இடம் அளித்து முகத்தில் தண்ணீர் தெளிப்பதற்குள் அவர் மூர்ச்சை ஆகி விட்டார். நெருக்கடியில் அவரை வெளியே கொண்டு வந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவர் மனைவி பட்ட பாடு… அப்பப்பா சொல்லி மாளாது.

பிசினஸ் செய்பவர்கள் லட்சக் கணக்கில் உண்டியலில் போட்டு காணிக்கை செலுத்த, வறியவர்களோ வேண்டியது நடப்பதற்காக மஞ்சள் துணியில் முடிச்சிட்டு வைத்திருக்கும் நாணயத்தை உண்டியலில் சமர்பணம் செய்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புகூட ஒருகோடி ரூபாயை உண்டியலில் போட்ட தொழிலதிபர் குறித்த செய்தியை ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பளிச்சிட்டுக் காட்டினார்கள்.

மொட்டை அடிக்கும் இடத்திலும் கியூ. அழுது ஆர்பாட்டம் செய்கின்ற குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பித்து மொட்டை அடிப்பவர்கள், முரட்டுக் குழந்தைகளை மிரட்டும் கண்களாலும், அழுத்தமான கை பிடிமானத்தாலும் அடக்கி ஒரு வழியாய் தாங்கள் எடுத்துக் கொண்ட பணியை திறம்பட செய்து முடிக்கிறார்கள்.

லட்டு வாங்கவும் கியூ. ஒரு டிக்கட்டுக்கு இரண்டு லட்டுகள். தெரிந்தவர், தெரியாதவர், அக்கம், பக்கத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுப்பதற்காக ஒரு சிலர் கட்டணம் செலுத்தி இன்னும் அதிகமாக வாங்கிச் செல்கிறார்கள்.

எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்டதே…. கூட்டத்தைத் தவிர்க்க ஏதேனும் வழியை கொண்டு வர இயலாதா? ஒருவர் மட்டுமே செல்லும் வகையிலும் அதே சமயம் சுற்றி காற்றோட்டமாகவும் பாதையை அமைக்க முடியாதா?

இப்படித்தான் அடித்துப் பிடித்துக்கொண்டு தரிசனம் செய்ய வருகிறார்களே… சன்னதிக்குள் எத்தனை செகண்டுகள் நிற்க முடிகிறது? ஜரகண்டி, ஜரகண்டி என கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக கைகளைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளுகிறார்களே?

தள்ளாத வயதில் வரும் பெரியோர்களின் மனதில் ‘அடுத்த முறை வரும் பாக்கியம் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லையே? ஒரு செகண்ட் பார்க்க விடமாட்டேன் என்கிறார்களே? என்ற ஆதங்கம் ஓடுகிறதே…

எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. வருடம் 365 நாட்களும் 24 மணிநேரமும் இவற்றையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். வயது வித்தியாசம், பாலின வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு – இவை ஏதும் இல்லாமல் என்னைக் காண பக்தியோடு ஓடோடி வரும் மக்களுக்கு உடலை வருத்தாமல் மனம் தளராமல் என்னை தரிசிக்கும் நிலை என்றுதான் வருமோ? இதற்கு யாரிடம் போய் பிராத்திப்பது?

மக்களுக்கு பிரச்சனை என்றால் ஏழுமலையானிடம் பிராத்திக்கலாம். அந்த பெருமாளுக்கே ஒரு கோரிக்கை என்றால் யார் தீர்த்து வைப்பது?

கலிகாலம்.
-கே. பத்மாவதி
(நன்றி: விஜயபாரதம் 05-02-2016 இதழில் வெளியான கதை)

Friday, November 13, 2015

மழைநாளில் வீட்டு மருத்துவம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழகத்தில் மழைக் கொட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சில தகவல்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் மீண்டும் பிளாகர் பக்கம் வந்துள்ளேன்.

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேல் தொலைபேசித் துறையில் பணி. இரவு, பகல் என 24 மணிநேர பணி சுழற்சி. ஆனாலும் என் வீட்டில் நான் செயல்படுத்திய, இன்றும் செயல்படுத்தி வருகின்ற சின்ன சின்ன விஷயங்களை முயற்சித்துப் பாருங்களேன்.
  1. காலையில் எழுந்ததும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயத்துடன் ஒரு டம்ளர் வெந்நீர். அதன் பிறகுதான் காபி.
  2. காலையில் சாப்பாடு. சாப்பிடுவதற்கு 1/2 மணி முன்னர் வெந்நீர்.
  3. தினமும் சாப்பாட்டில் ஆளுக்கொரு ஒரு நெல்லிக்காய் -  குக்கரில் மற்ற காய்கறிகள் போல் வேகவைத்து விடுவேன். 
  4. அதுபோல உப்பு, காரம்  போடாமல் வட்ட வட்டமாய் வெள்ளறிக்காய் நறுக்கியது. 
  5. தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள இரண்டு சிறிய வெங்காயம் பச்சையாய்.
  6. வாரம் ஒருநாள் பாகற்காய் சாம்பார்/பிட்லை.
  7. மதியம் லைட்டாக சத்துமாவு அல்லது ஓட்ஸ் கஞ்சி. வேலைக்குச் செல்பவர்களுக்கு ஏதேனும் டிபன்.
  8. இரவு ஏதேனும் டிபன். புளி சேர்க்காத சைட் டிஷ். சாப்பிடுவதற்கு 1/2 மணி முன்னர் வெந்நீர். 
  9. இரவு படுக்கும் முன் பூண்டு 4 அல்லது 5 வில்லைகள், வேகவைத்தது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மழையால் தொற்றிக்கொள்ளக் காத்திருக்கும் வியாதிகள் கிட்டே நெருங்க யோசிக்கும்.
  10. அதன் பின்னர் சூடாக ஒரு கப் பால் அல்லது வெந்நீர்.
  11. இருமல் வரும்போல அறிகுறி தெரிந்தாலே நெய்யில் மிளகை வெடிக்க வைத்து மென்று சாப்பிடுதல்.
  12. பண்டிகை மற்றும் திருமண விழாக்களில் வெளியில் சாப்பிட்டு வந்தால் வெந்நீரில் பெருஞ்சீரகத்தை போட்டு சாப்பிடுதல். (ஓட்டலில் சாப்பிட்ட நேர்ந்தாலும்)  இரண்டு மூன்று முறை இப்படி சாப்பிடுவதால் வயிறு உப்புசம், ஜீரணக் கோளாறு போன்றவை வராது.
  13. எங்கு வெளியில் சென்றாலும் கையில் சாதாரண சீரகம், பெருஞ்சீரகம், ஓமம் போன்றவற்றை எடுத்துச் செல்லுதல்.
  14. வயிறு குமட்டல், வாமிட்டிங் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சாதாரண சீரகத்தை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  15. தலைவலி வந்தால் முதலில் தண்ணீரில்  முகத்தை கழுவ வேண்டும். பிறகு ஆவி பிடிக்கலாம். உடனடியாக  பெருஞ்சீரக வெந்நீர் குடிக்கலாம். பின்னர் கண்களை மூடிக்கொண்டு 1/2 மணி படுக்கலாம். இவை எதற்குமே  சரியாகவில்லை என்றால் மாத்திரைக்குச் செல்லலாம்.
  16. வயிற்று வலி வந்தால் வெந்நீரில் நெய்யைவிட்டு சாப்பிடலாம்.
  17. வயிற்றுப் போக்கு வந்தால் வெந்தயத்தை தயிரில் போட்டு சாப்பிடலாம். ஜவ்வரிசியை வேக வைத்து சாப்பிடலாம். உடனடியாக வயிற்றுப்போக்குக் கட்டுப்படும். 
  18. வாரம் ஒரு நாள் காலையில் இஞ்சியை மிக்ஸியில் அரைத்து வெந்நீரில் கரைத்து கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் கலகலப்பாக இருக்கும்.
  19. பொதுவாக வயிறு மற்றும் தலைவலி சம்பந்தப்பட்ட தொந்திரவுகள் தெரிந்தாலே தண்ணீருக்கு பதில் வெந்நீர் சாப்பிடலாம். நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.
  20. மழை நாட்களில் வீட்டுக்குள் வரும்போது செருப்பை உடனடியாக நல்ல தண்ணீரில் கழுவி வைத்துவிட வேண்டும். நோய் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். 
  21. கூடுமானவரை புத்தகங்கள், பணம் போன்றவற்றை எச்சில் தொட்டு திருப்பாமல் இருக்கலாம்.  ஏற்கெனவே பலர் எச்சில் தொட்டு திருப்பி இருப்பார்கள். அதையே நாமும் நம் நாக்கில் தொட்டு திருப்பினால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. 
- கே. பத்மாவதி





Monday, June 24, 2013

தினம் 10 செயல்கள்!

சிருஷ்டி-9 in www.padmalogy.blogspot.in
 
1.   விடியற்காலையில் எழுந்ததும் பத்து நிமிடங்கள் வாக் சென்று வந்தால் சுறுசுறுப்பாக இருக்கும்.

2.   அதுபோல ஐந்து நிமிடங்கள் பிராணாயானம் செய்தாலும் சுறுசுறுப்பாக உணரலாம். தரையில் அமர்ந்து கண் மூடி மூச்சை நன்றாக இழுத்து விடலாம். இதை பத்து முறை, பதினைந்து முறை என கணக்கு வைத்துக் கொண்டு செய்தால், அதுவே மிகச் சிறந்த மூச்சுப் பயிற்சியாகும்.

3.   காலையில் காபி சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது நல்லது.

4.   சாப்பாடு சாப்பிடுவதற்கு அரை மணி முன்னதாகவும், சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகும் வெதுவெதுப்பான வெந்நீர் சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

5.   இரவு உறங்குவதற்கு முக்கால் மணி நேரத்துக்கு முன்னால் வெந்நீர் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

6.   பொதுவாகவே தயிராக சாப்பிடுவதற்கு பதில் மோராக கடைந்து சாப்பிடுவது சிறந்தது.

7.   இரண்டு மூன்று முறை காபி சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள், ஒரு காபியை கட் செய்து விட்டு, தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். நல்ல எனர்ஜி கிடைக்கும்.

8.   வெந்நீரில் டீப்பொடியையும், சர்க்கரையையும் போட்டு கொதிக்க விட்டு, இறக்கியதும் எலுமிச்சைப்பழச் சாற்றைப் பிழிந்து குடித்து வரலாம்.

9.   தலைவலி வந்தால் சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் சாப்பிட்டு விட்டு உங்கள் வேலையை கவனியுங்கள். சாதாரண தலைவலி என்றால் தானாகவே உங்களை விட்டு போய்விடும்.

10. தினமும் வழக்கமாக செய்கின்ற வேலைகளுக்கு நடுவே, ஏதேனும் ஒரு புத்தகத்தில் கதை, கவிதை அல்லது கட்டுரை படிப்பது, பிடித்த பாட்டு கேட்பது என்று மாற்றிச் செய்யும் போது புத்துணர்வாக இருக்கும்.
 
பத்மா in சிருஷ்டி-9 in www.padmalogy.blogspot.in

Wednesday, June 12, 2013

அம்மாவா? மகனா? பாசத்தில் யார் ஜெயித்தது?

சிருஷ்டி-8 in www.padmalogy.blogspot.in
 
என்னுடைய  மகள் வயிற்றுப் பேரனுக்கு இப்போது 10 வயதாகிறது. அவனுக்கும் என் மகளுக்கும் இடையே ஒரு வாக்குவாதம்.
  
என் மகள்: ‘நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்’.
 
என்  பேரன்:  ‘இல்லையில்லை நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்’.
 
என் மகள்:  சரி, நீ என்னை எந்த அளவுக்கு லவ் பண்ணறே?
 
என் பேரனின் பதிலில் நாங்கள் புல்லரித்துப் போனோம். அப்படி என்ன சொல்லி இருப்பான் என் பேரன்?
 
என் பேரனின் பதிலை நீங்களே கண்டுபிடியுங்கள்:

A: வானமளவு
B: கடலளவு
C: உலகலவு
D: இவை எதுவுமில்லை...
 
உங்கள் பதில் D என்றால், சரியான பதில் என்னவாக இருக்கும்?

 

பதில் D: இவை எதுவுமில்லை.


பேரனின் பதில்:
 

‘அம்மா! நீ என்னை எவ்ளோ லவ் பண்ணறயோ அதைவிட அதிகமா நான் உன்னை லவ் பண்ணறேன்’
 

பத்மா in சிருஷ்டி-8 @  www.padmalogy.blogspot.in

Monday, June 10, 2013

செடி கொடிகளின் பாசமும், நேசமும்!

சிருஷ்டி-7 in www.padmalogy.blogspot.in

    நான் தினமும் மொட்டை மாடியில் வளர்க்கின்ற செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவேன். தொட்டிச் செடிகளுக்கு என்ன புரியுமோ தெரியவில்லை, தலையை ஆட்டி ஆமோதித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பதைப் போல அசைந்தாடும்.

    என் மகள் தண்ணீர் ஊற்றும் போது, செடிகளின் ரியாக்‌ஷனே மாறிவிடும். உம்மென்று கோபித்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்து கொள்ளுகின்ற சிறுபிள்ளைகளின் பிடிவாதம் போல அசைவற்று அமைதியாக இருக்கும். இருவரும் ஒரே தண்ணீரைத் தான் ஊற்றுகிறோம். ஆனால் செடிகளின் ரியாக்‌ஷன் மட்டும் வெவ்வேறு மாதிரி இருக்கிறதே என்று என் மகள் என்னிடம் கேட்காத நாளே இல்லை.

        செடி கொடிகளின் மேல் தீராத காதலுடன், வாஞ்சையாக சின்னஞ்சிறு குழந்தையை கையாளுவதைப் போல மென்மையாகவும், அனுசரணையாகவும், கருணையோடும் பராமரிக்கும் போது, ஆறறிவு மனிதர்களின் பாசத்தையும், நேசத்தையும், பரிவுணர்வையும் ஓரறிவு செடிகொடிகள் புரிந்து கொள்ளும். அதை விட்டு கடமையாக இயந்திரத்தனமாய் தண்ணீர்  ஊற்றும் போது செடிகொடிகளும் அதே ரியாக்‌ஷனைத்தான் திரும்பக் காட்டும். இது தான் என் பதில்.

        ஒருமுறை என் மகள் ஒரு செடியை தத்தெடுக்கிறேன் என்று சொல்லி தன் கைகளால் நட்டு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள். ஆனால் ஒரே வாரத்தில் வாடி வதங்கிப் போய் சுருண்டு படுத்து விட்டது. பிறகு நான் அதற்கு உரம் போட்டு வைத்தியம் பார்த்து குணமாக்கிய நிகழ்வு தனி கதை. 
பத்மா in சிருஷ்டி-7 @  www.padmalogy.blogspot.in

Friday, May 31, 2013

பார்வைகளும், ஆசிர்வாதங்களும்!

சிருஷ்டி-6 in www.padmalogy.blogspot.in
 
ஆசிர்வாதம் செய்வது என்பதை நல்லெண்ணத்துடன் வாழ்த்துவது என்று பொருள் கொள்ளலாம். ஆசிர்வாதத்துக்கும், பார்வைக்கும் சம்பந்தம் உண்டு என்கிறது சாஸ்திரங்கள். ஒருவரை கண்களால் பார்க்கும் போதோ அல்லது அவரது நற்செயலை நாம் காதுகளால் கேட்கும் போதோ, மனமும் அதை நல்லெண்ணத்தோடு கிரஹித்துக் கொண்டு, அதே அதிர்வலையில் ஆசிர்வதிக்கும் போது தான் அதன் முழுமையான பலனும் சென்றடையும். பார்வைகள் மற்றும்  அதன் தொடர்பான ஆசிர்வாதங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். பார்வையில் 3 விதம் உண்டு. ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு பலன் உண்டு.
 
1.   ஹஸ்த தீட்சை
2.   நேத்ர தீட்சை
3.   மானச தீட்சை
 
ஹஸ்த தீட்சை:
கையசைத்து ஆசிர்வதிப்பது ஹஸ்த தீட்சை. உதாரணத்துக்கு, மகான்கள் தங்கள் பக்தர்களுக்கு கையசைத்து ஆசிர்வாதம் செய்வது ஹஸ்த தீட்சை.
 
நேத்ர தீட்சை:
கண்களாலேயே தன் அருளைக் காட்டி ஆசிர்வதிப்பது நேத்ர தீட்சை. உதாரணத்துக்கு மீன்கள் தண்ணீரில் முட்டைகளை இட்டு, முட்டைகளை திரும்பித் திரும்பிப் பார்த்து கண்காணித்து வரும். அந்த பார்வையினாலேயே அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்குமாம். இது நேத்ர தீட்சை.
 
மானச தீட்சை:
மனதால் நினைத்து மானசீகமாக ‘நலமாக இரு’ என்று வாழ்த்துவது மானச தீட்சை. உதாரணத்துக்கு ஆமை மணலில் முட்டை இட்டு விட்டுப் போய்விடும். ஆனால் தன் முட்டைகளை மனதிலேயே நினைத்திருக்குமாம். தன் நினைவினாலேயே ஆமை குஞ்சு பொரித்து விடும்.
 
பத்மா(www.padmalogy.blogspot.in)