என்னைப் பற்றி...

கே.பத்மாவதி!
 
திருக்கோயிலூரைச் சேர்ந்த திருமதி. கே.பத்மாவதி என் தாய். இவர் தொலைபேசித் துறையில் 1966-ல் பணியில் சேர்ந்து   படிப்படியாக பணியில் உயர்ந்து ஓய்வுபெற்றவர். என் அப்பா திரு. வி. கிருஷ்ணமூர்த்தியும் தொலைபேசி துறையிலேயே 40 ஆண்டு காலம் பணிபுரிந்து Sub Divisional Engineer ஆக ஓய்வு பெற்றவர். 
 
அம்மா கடுமையான உழைப்பாளி. 24 மணி நேர சுழற்சிப் பணி.  ஆகவே சமையல் ஈசியாக இருப்பதற்காகவே  குழம்புப் பொடி, ரசப் பொடி, மோர் குழம்புப் பொடி, மிளகு குழம்பு பொடி இப்படி வகை வகையான ரெடிமேட் பொடிகளை செய்து வைத்துக் கொள்வார்.
 
கோடை காலமானால் தன் கையால் வடாம் போட்டு ஸ்டாக் செய்து வைப்பார். மார்கழி மாதத்தில் வாசல் தெளித்து கலர் கோலமிடுவார்.  வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளாமலேயே எல்லா வேலைகளையும் தானே செய்வார். தோட்டம் அமைப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர். இவர் கையால் வைத்த பவளமல்லியும், செம்பருத்தியும் தான் எங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றன. திடீரெனெ வருகின்ற உறவினர்கள் கிளம்பும் போது அவர்களுக்கு  வைத்துக் கொடுக்க எங்கள் அம்மா வைத்த வெற்றிலையை தான் பறித்து  பயன்படுத்துகிறோம்.  
 
என் அம்மாவின் எல்லா செயல்களுக்கும் என் அப்பாவும் உறுதுணையாக இருந்தார். இருவரும் தினமும் எங்களுடன் அன்றாட நிகழ்வுகளை கதை போல சொல்லி பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆகவே என் அப்பா அம்மாவே எங்கள் உயிர் தோழர்களானார்கள். கருத்து வேறுபாடு, ஒளிவு மறைவு எதுவும் எங்களுக்குள் இன்று வரை இல்லாததற்கு அதுவும் ஒரு மிக முக்கியக் காரணம்.
 
இதுதவிர பத்திரிகைகள் படிப்பது, அதில் தேவையானதை கட் செய்து வைத்துக் கொள்வது என்று தன் அறிவுக்கும் தீனி போடுவதை குறைத்துக் கொண்டதில்லை.
 
அம்மா சேகரித்த பத்திரிகை செய்திகள், கதைகள், கட்டுரைகளை எங்கள் கையால் ஊசி நூல் வைத்து பைண்டிங் செய்வதே எங்களுக்கு அந்த காலத்து சம்மர் கிளாஸ். அவ்வாறு நாங்களே பைண்டிங் செய்த புத்தகங்களை படிக்கும் போது எங்களுக்குள் இருந்த கிரியேவிடி இன்னும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது என்று சொல்லலாம்.
 
இன்று என் அம்மா இமெயில், சாட், ஃபேஸ்புக், ப்ளாக் என்று எல்லா தொழில்நுட்பங்களையும் திறம்பட கையாள்கிறார். அன்று பத்திரிகை செய்திகளை கட் செய்து சேகரித்தவர் இன்று இண்டர்நெட்டில் வெப்சைட் லிங்குகளை சேகரிக்கிறார். இதோ இப்போது ப்ளாகில் பகிரவும் ஆரம்பித்து விட்டர்.
 
இவரது தன்னம்பிக்கையும், கடுமையான உழைப்பும், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்வதில் கொண்ட உறுதியும் எங்களுக்குள்ளும் வேரூன்றி விட்டது என்றே சொல்லலாம். இதற்கு சான்றாகத்தான் நாங்கள் இன்றும் திகழ்கிறோம் என்பதைக் கூறுவதில் பெருமை அடைகிறேன். நான் இந்தியாவில் காம்கேர் என்ற ஐ.டி நிறுவனத்தின் CEO ஆகவும், என் தங்கையும், தம்பியும் யு.எஸ்ஸில் ஐ.டி துறையில் தலைமை பொறுப்பிலும் செயல்படுகிறோம்.

இவரது அனுபவங்களும், திறமைகளும் மற்றவர்களுக்கு உபயோகப்படலாம் என்ற நோக்கில், அவற்றை இந்த ப்ளாக் மூலம் பகிர்ந்து கொள்ள  இருக்கிறோம்.

நன்றியுடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட்
சென்னை