Monday, June 10, 2013

செடி கொடிகளின் பாசமும், நேசமும்!

சிருஷ்டி-7 in www.padmalogy.blogspot.in

    நான் தினமும் மொட்டை மாடியில் வளர்க்கின்ற செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவேன். தொட்டிச் செடிகளுக்கு என்ன புரியுமோ தெரியவில்லை, தலையை ஆட்டி ஆமோதித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பதைப் போல அசைந்தாடும்.

    என் மகள் தண்ணீர் ஊற்றும் போது, செடிகளின் ரியாக்‌ஷனே மாறிவிடும். உம்மென்று கோபித்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்து கொள்ளுகின்ற சிறுபிள்ளைகளின் பிடிவாதம் போல அசைவற்று அமைதியாக இருக்கும். இருவரும் ஒரே தண்ணீரைத் தான் ஊற்றுகிறோம். ஆனால் செடிகளின் ரியாக்‌ஷன் மட்டும் வெவ்வேறு மாதிரி இருக்கிறதே என்று என் மகள் என்னிடம் கேட்காத நாளே இல்லை.

        செடி கொடிகளின் மேல் தீராத காதலுடன், வாஞ்சையாக சின்னஞ்சிறு குழந்தையை கையாளுவதைப் போல மென்மையாகவும், அனுசரணையாகவும், கருணையோடும் பராமரிக்கும் போது, ஆறறிவு மனிதர்களின் பாசத்தையும், நேசத்தையும், பரிவுணர்வையும் ஓரறிவு செடிகொடிகள் புரிந்து கொள்ளும். அதை விட்டு கடமையாக இயந்திரத்தனமாய் தண்ணீர்  ஊற்றும் போது செடிகொடிகளும் அதே ரியாக்‌ஷனைத்தான் திரும்பக் காட்டும். இது தான் என் பதில்.

        ஒருமுறை என் மகள் ஒரு செடியை தத்தெடுக்கிறேன் என்று சொல்லி தன் கைகளால் நட்டு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள். ஆனால் ஒரே வாரத்தில் வாடி வதங்கிப் போய் சுருண்டு படுத்து விட்டது. பிறகு நான் அதற்கு உரம் போட்டு வைத்தியம் பார்த்து குணமாக்கிய நிகழ்வு தனி கதை. 
பத்மா in சிருஷ்டி-7 @  www.padmalogy.blogspot.in

No comments: